Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்தியாவின் தடுப்பூசி தேவைகளைப் பூர்த்தி செய்யுமா உற்பத்தி? உண்மை என்ன?

இந்தியாவின் தடுப்பூசி தேவைகளைப் பூர்த்தி செய்யுமா உற்பத்தி? உண்மை என்ன?
, வெள்ளி, 19 மார்ச் 2021 (23:31 IST)
இந்தியா உலக நாடுகள் சிலவற்றுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறது
 
கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மிகப் பெரிய அளவில் உருவெடுத்திருக்கும் இந்தியா, அதன் ஏற்றுமதி தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்று வருகிறது.
 
அதன் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம், பிரிட்டனுக்கான மருந்துகளும் நேபாளத்துக்கான மருந்துகளும் அனுப்பப்படுவது, தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
 
ஏன் இந்தத் தட்டுப்பாடு?
நோவாவாக்ஸ் மற்றும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) - மூலப்பொருள் பற்றாக்குறை குறித்து சமீபத்தில் கவலை எழுப்பியது.
 
அதன் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா, சிறப்புப் பைகள், வடிப்பான்கள் போன்ற குறிப்பிட்ட மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை தான் இதற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.
 
செல் கல்சர் செய்யத் தேவையான இணைப்பான்கள், ஒற்றை பயன்பாட்டுக் குழாய்கள் மற்றும் சிறப்பு ரசாயனங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
"மூலப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வது மிக முக்கியமான கட்டுப்படுத்தும் காரணியாக மாறப்போகிறது - இதுவரை இதற்கு ஒரு தீர்வு காண யாராலும் முடியவில்லை" என்று பூனாவாலா கூறினார்.
 
உலகளவில் தடுப்பூசிகளைத் தடையின்றி உற்பத்தி செய்வதையும் விநியோகிப்பதையும் உறுதி செய்ய இந்திய அரசு இதில் தலையிடுமாறு எஸ்ஐஐ கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
 
ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் மற்றொரு இந்திய நிறுவனமான பயலாஜிகல் ஈ -யும் தடுப்பூசி உற்பத்தியை பாதிக்கும் பற்றாக்குறைகள் குறித்துக் கவலை எழுப்பியுள்ளது.
 
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மஹிமா டத்லா சமீபத்தில் அமெரிக்க விநியோகஸ்தர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவிற்குள் பொருட்களை அனுப்ப உறுதி அளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறுகிறார்.
 
தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான பொருட்களின் தட்டுப்பாடுகளை அடையாளம் காணுமாறு அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தியுள்ளார்.
 
1950 களில் இருந்து நடைமுறையில் உள்ள பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (டிபிஏ) கையில் எடுத்துள்ளார் அவர். இது அவசரகாலத் தேவைகளுக்கு ஏற்ப, உள்நாட்டுப் பொருளாதாரத்தை இயக்க, அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
 
இது தடுப்பூசி தயாரிக்கத் தேவையான பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், தன் சொந்த உற்பத்தியை அதிகரிக்கவும் அமெரிக்காவிற்கு அதிகாரமளிக்கிறது.
 
 
முன்னாள் அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிபிஇ கிட் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்த இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பல்வேறு உலகளாவிய தடுப்பூசி தயாரிப்பாளர்களின் பிரதிநிதிகள் மார்ச் மாத தொடக்கத்தில் சில கவலைகளை எழுப்பினர்,
 
•முக்கிய விநியோகஸ்தர்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் உலகளாவிய உற்பத்தியை பாதிக்கலாம்
 
•சில சிறப்புப் பொருட்கள், தர நிர்ணயக் கட்டுப்பாட்டுக்கு உட்படவில்லை.
 
•பிறரிடமிருந்து வாங்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றுகளைப் பெற, சுமார் 12 மாதங்கள் ஆகலாம்
 
என்பவையே அவை.
 
லிவர்பூலின் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி விநியோகச் சங்கிலிகள் குறித்த நிபுணர் டாக்டர் சாரா ஷிஃப்லிங், "மருந்து விநியோகச் சங்கிலி மிகவும் சிக்கலானது. தேவை மிக அதிகமாக இருந்தாலும் கூட, புதிய விநியோகஸ்தர்கள், பிற தொழில்களைப் போல் திடீரென்று அதிகமாக உருவாக முடியாது. அப்படியே உருவானாலும் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக ஆவதில் தாமதம் ஏற்படும். அமெரிக்காவின் தடை நடவடிக்கைகள், தற்போதுள்ள உலகளாவிய பற்றாக்குறைகளுக்கு எந்த அளவுக்கு ஒரு காரணமோ அதே அளவுக்கு அவற்றி எதிர்வினையுமாகும். " என்று விளக்குகிறார்.
 
"உலகெங்கிலும் திடீரென தேவைப்படும் எந்தவொரு தயாரிப்புக்கும் தேவையான பொருட்களுக்கு பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாதது" என்று அவர் கூறுகிறார்.
 
இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன - ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி (உள்நாட்டில் கோவிஷீல்ட் என அழைக்கப்படுகிறது) மற்றும் இந்திய ஆய்வகங்களில் உருவாக்கப்படும் கோவாக்சின் ஆகியவை தாம் அவை.
 
ஜனவரி தொடக்கத்தில் இருந்து, SII இலிருந்து கிட்டத்தட்ட 130 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுஅல்லது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய மருந்து நிறுவனங்கள் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடங்குவதன் மூலமோ அல்லது உற்பத்தி மையங்களை மாற்றியமைப்பதன் மூலமோ சில மாதங்களாக உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இவை இரண்டும் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் உலகளாவிய விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுகின்றன.
 
சீரம் நிறுவனம் ஜனவரி மாதம் ஒரு மாதத்தில் 60 முதல் 70 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்யமுடியும் என்று கூறியது - இதில் கோவிஷீல்ட் மற்றும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட நோவாவாக்ஸ் (இன்னும் பயன்படுத்த உரிமம் பெறவில்லை) ஆகியவை அடங்கும்.
 
இந்தியாவின் தலைசிறந்த கோவிட் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள்:
 
 
 
மார்ச் மாதத்திலிருந்து ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் டோஸ்கள் என்ற அளவில் உற்பத்தியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக SII பிபிசியிடம் கூறியிருந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கள் அது பற்றி விசாரித்தபோது உற்பத்தி நிலை, இன்னும் 60 முதல் 70 மில்லியன் டோஸ்கள் என்ற அளவிலேயே இருந்தது, அது அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
 
ஏற்கனவே தடுப்பூசிகள் போதிய கையிருப்புகளைக் கொண்டிருந்ததா, உற்பத்தியில் உள்நாட்டு பயன்பாட்டிற்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தோ அந்நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.
 
இந்திய அரசாங்கம் தனது தடுப்பூசி வழங்கல் திட்டத்தை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. தொற்றின் இரண்டாவது அலை உருவாகி வரும் இந்தச் சூழலில், இதுவரை நாடு முழுவதும் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
ஆனாலும், நாட்டின் சில பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது.
 
ஏழு மாதங்களுக்குள் 600 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என்பது இலக்கு, அதாவது மாதத்திற்கு 85 மில்லியன் டோஸ்கள்.
 
இதுவரை, இந்திய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் டோஸ் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது SII. மற்றொரு நிறுவனமான பாரத் பயோடெக் 10 மில்லியன் டோஸை வழங்குகிறது.
 
ஸ்பூட்னிக் தடுப்பூசியின் 200 மில்லியன் டோஸ் தயாரிக்க ரஷ்ய கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்துடன் இந்தியா உரிம ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.
 
இவை இந்திய உற்பத்தியாளர்களால், இந்தியச் சந்தை மற்றும் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படவுள்ளன.
 
இந்திய உள்நாட்டுத் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற புரிதலின் பேரில் கோவிஷீல்டிற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டதாக எஸ்ஐஐ தலைவர் ஆதர் பூனாவாலா ஜனவரி மாதம் சுட்டிக்காட்டினார்.
 
எனினும், கோவிஷீல்ட்டை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா என்று பங்களாதேஷ் கேள்வி எழுப்பிய பின்னர், ஏற்றுமதியில் எந்தத் தடையும் இல்லை என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியது.
 
 
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் முன்முயற்சியில் இந்தியாவின் எஸ்.ஐ.ஐ உறுதியளித்துள்ளது.
 
கடந்த செப்டம்பரில், கோவாக்ஸுக்கு அஸ்ட்ராசெனிகா அல்லது நோவாவாக்ஸ் 200 மில்லியன் டோஸ் வழங்க SII ஒப்புக்கொண்டது.
 
சுமார் 900 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மற்றும் 145 மில்லியன் டோஸ் நோவாவாக்ஸ் ஆகியவற்றுக்கான இரு தரப்பு வணிக ஒப்பந்தங்களை செய்துள்ளது எஸ் ஐ ஐ என ஐ.நா. தரவுகள் கூறுகின்றன.
 
பல நாடுகளுக்கு, குறிப்பாகத் தெற்காசியாவில் உள்ள தன் அண்டை நாடுகளுக்கு, இந்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாகவே வழங்கியுள்ளது.
 
எட்டு மில்லியன் டோஸ்களை இலவசமாக வழங்கி, இந்தியா, 7.3 மில்லியன் வழங்கிய சீனாவை விட உயர்ந்த இடத்தில் இருப்பதாக ஐ நா தரவுகள் குறிப்பிடுகின்றன.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவு !