காற்றிலிருந்து கரியமில வாயுவை நீக்கும் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உணவுப் பொருள் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
புவி வெப்பமயமாதலை கட்டுக்குள் வைக்க கரியமில வாயுவைக் காற்றிலிருந்து நீக்கும் இயந்திரங்கள் தேவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரம் இது நிலம், நீர் மற்றும் மின்சார பயன்பாட்டில் முக்கிய தாக்கம் செலுத்தும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக 2050ஆம் ஆண்டுக்குள், உலகின் சில பகுதிகளில், உணவு விலை ஐந்து மடங்கு வரை உயரும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
புவி வெப்பமயமாதல்
2015ஆம் ஆண்டு கையெழுத்தான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அடுத்து, புவி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிடும்போது 1.5 செல்சியசுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி என ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.
2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுவதுமாக நிறுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு (IPCC) தெரிவித்தது. மேலும், வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை நீக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
இதை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டம்தான் கரியமில வாயுவை உறிஞ்சும் திட்டம் (BECCS - bioenergy with carbon capture and storage). அதாவது கரியமில வாயுவை உள்வாங்க அதிகளவில் மரம் நடுவது.
இந்த திட்டத்திற்கு அதிகளவிலான நிலப்பரப்பு தேவைப்படும்; உலக மக்கள் தொகை அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதன் காரணமாக விவசாய நிலப்பரப்பு குறையும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
மற்றொரு தொழில்நுட்பத்தின் பெயர் நேரடியாகக் காற்றை உறிஞ்சுவது (Direct Air Capture -DAC). இந்த திட்டத்தில் வளிமண்டலத்திலிருந்து காற்று உறிஞ்சப்படும்.
இந்த திட்டம் பரிசோதனை முறையில் சுவிட்சர்லாந்து, கனடாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், இது உணவு உற்பத்தியில், அதன் விலையில் எப்படி தாக்கம் செலுத்தும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து அறிவியலாளர்கள் கூறுவது என்ன?
கரியமில வாயுவைக் காற்றிலிருந்து உறிஞ்சும் இயந்திரத்துக்கு அதிக அளவில் மின்சாரமும், நீரும் தேவை என்கிறது ஆய்வு.
இந்த இயந்திரம் வேலை செய்ய அதிகளவில் வெப்பம் தேவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது, தற்போதைய உலகளாவிய இயற்கை எரிவாயு நுகர்வைப் போல 115% ஆற்றல் தேவைப்படும்.
உலக மின்சார உற்பத்திக்கும் தேவைப்படும் நீரில் 25 சதவீதம் இதற்குத் தேவைப்படும்.
இந்த DAC திட்டத்திற்கு அதிகளவில் நிலம் தேவை இல்லை என்றாலும், புதிய காடுகள் மற்றும் மின் உற்பத்திக்கான பயிர்கள் பயிரிட வேண்டி இருக்கும்.
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய வெர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரஸ் க்ளாரென்ஸ், "இந்த தொழில்நுட்பத்தை வளர்த்து எடுக்கும் முயற்சியைத் தொடக்கத்திலேயே நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல," என்கிறார்.
இந்த தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்று. இந்த இயந்திரத்தை மேம்படுத்த வேண்டுமென விரும்புகிறோம். ஆனால், இந்த இயந்திரத்தால் மட்டுமே உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முழு தீர்வையும் கொண்டு வந்துவிட முடியாது தானே?" என்கிறார் அவர்.
இந்த இயந்திரம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டால், உலகின் பல்வேறு பகுதிகளில் சோளம், கோதுமை மற்றும் அரிசி விலை உயரும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
குறிப்பாக சஹாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2050 வாக்கில் உணவு விலை 5 முதல் 600 சதவீதம் வரை உயரும்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற ஆசிய நாடுகளில், உணவு விலை ஐந்து மடங்கும், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் இரண்டிலிருந்து மூன்று மடங்கும் விலை உயரும்.
மறுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள்
இந்த இயந்திர உருவாக்கலில் பங்கெடுத்துள்ளவர்கள் இந்த ஆய்வறிக்கையை மறுக்கிறார்கள். தவறான புரிதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்கின்றனர். இதனால் பயனே அதிகம், ஆபத்து மிகவும் குறைவு என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் அதே நேரம் நம்மிடம் ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. அதன் காரணமாக நாம் கரியமில வாயுவை எப்போதும் போல வெளியேற்றலாம் என நினைப்பதும் சரி அல்ல என்கிறார்கள் அவர்கள்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.