Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சௌதியில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர் இளைஞராக விடுதலை

Saudi
, சனி, 25 ஜூன் 2022 (13:15 IST)
சௌதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாகச் சந்தேகத்தின் பேரில் 13 வயதில் கைது செய்யப்பட்டவர் 8 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மனி உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தற்போது இளைஞராகிவிட்ட முர்தாஜா குரைரிஸ் ஒரு கட்டத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்தார். பலத்த எதிர்ப்பு காரணமாக அது சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2011 இல் அரபு எழுச்சிப் போராட்டங்களின்போது அவர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்பட்டதன் காரணமாக 2014 இல் அவரை சௌதி அரேபிய காவல்துறை கைது செய்தது.

அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டவர்களிலேயே மிகவும் குறைந்த வயதானவர் குரைரிஸ் எனக் கருதப்படுகிறது.

குரைரிஸ் ஷியா பிரிவு முஸ்லிம். சௌதி அரேபியாவில் இவர்கள் சிறுபான்மையினர். இவர்கள் கணிசமாக இருக்கும் சௌதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் பிற குழந்தைகளுடன் சைக்கிளில் பேரணியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சௌதி அரேபியாவில் தங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் ஷியா பிரிவினர் நீண்ட காலமாக புகார் கூறி வருகின்றனர்.

அரபு உலகம் முழுவதும் கிளர்ச்சி நடந்தபோது, உற்சாகமடைந்த ஷியா பிரிவு மக்கள் சௌதி அதிகாரிகளுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் உலகின் பல நாடுகளில் இத்தகைய போராட்டங்களால் ஆட்சி மாற்றங்கள் நடந்தபோதும் சௌதி அரேபியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இத்தகைய போராட்டங்களும் கிளர்ச்சிகளும் சௌதி பாதுகாப்புப் படையினரால் ஒடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

அப்படிக் கைது செய்யப்பட்டவர்களில் முர்தாஜா குரைரிஸும் ஒருவர். போராட்டம் நடத்தியபோது அவருக்கு 11 வயது. கைது செய்யப்பட்டபோது 14 வயது. அவர் மீது குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படாமல் தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

அப்போதும் இப்போதும் எடுக்கப்பட்ட அவரது படங்கள் அவரது முழுக் கதையையும் சொல்லக்கூடியவை. கைது செய்யப்பட்டபோது அவர் ஓர் குழந்தை. இப்போது நேர்த்தியான தாடி வைத்த இளைஞர்.

இறுதியாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோது, ​​அவர் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படும் அவரது மூத்த சகோதரருடன் அவர் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சினார்கள்.

குரைரிஸின் வாக்குமூலம் அவருக்கு எதிரான ஆதாரமாகத் தரப்பட்டது. ஆனால் அது சித்திரவதை செய்து பெறப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்குபவர் ஒரு சிறுவன் என்பதால் அந்த வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாகவே மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முதலில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது எட்டாகக் குறைக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால், அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மனித உரிமை ஆர்வலர்கள் அவரை விடுதலை செய்வதற்கான அரசின் முடிவை வரவேற்றுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சத்துடன் தடுப்புக்காவலில் அவர் பட்ட உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களாக இருக்கும்போது செய்யப்படும் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று 2020-ஆம் ஆண்டு சௌதி அரேபிய மன்னர் உத்தரவிட்டார். ஆனால் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் நெருக்கடி - தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்!