ஹூண்டாய் நிறுவனத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட கார் உற்பத்தி பிரிவு அடுத்த மாதம் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான ஹியுங் சூ லெகீம் ஜெய்பூரில் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பிரிவு அடுத்த மாதம் செயல்படத் தொடங்கியதும் உற்பத்தி இரண்டு மடங்காக, அதாவது 6 லட்சமாக உயரும் என அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 3 லட்சத்து 30,000 கார்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இதில் 80,000 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர், உள்நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் விற்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிக கார்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனம் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு 5.3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யவும், அதில் 2.5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.