ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் அக்ஸர் படேல். போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் “இன்று டாஸை தவிர அனைத்துமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். போட்டிக்கு முன்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பயமின்றி விளையாட வேண்டும் என்று ஆலோசித்தோம். அதன்படி விளையாடினோம்” எனக் கூறியுள்ளார்.