இனிவரும் போட்டிகளில் தோனி விளையாடுவாரா?: புயலை கிளப்பும் ராகுல் டிராவிட்!
இனிவரும் போட்டிகளில் தோனி விளையாடுவாரா?: புயலை கிளப்பும் ராகுல் டிராவிட்!
சமீப காலமாக இந்தியாவின் சிறந்த கேப்டன் என பெயர் பெற்ற தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் வந்தவாறு உள்ளன. குறிப்பாக கேப்டன் பொறுப்பை துறந்த பின்னர் தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்தவாறே உள்ளன.
அவரது சமீபத்திய போட்டிகளில் அவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்யாதது அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறலாமா என்ற விவாதத்துக்கே வந்துள்ளது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனி சொதப்பியது கடும் விமர்சனமாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த இறுதியாட்டத்தில் இந்திய முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். ஆனால் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களான யுவராஜ் மற்றும் தோனி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது தற்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். அவர் கூறுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதற்குள் நாம் வலுவான இந்திய அணியை கட்டமைக்க வேண்டும்.
அதற்கேற்றார்போல் மூத்த வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரது நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்க வேண்டும். இவர்களின் பங்கு அடுத்த 2 ஆண்டுகள் எப்படி இருக்கும் என்பதை பிசிசிஐ முடிவெடுக்க இது தான் சரியான நேரம். வரும் போட்டிகளில் இவர்களை தேர்வு செய்யும் விவகாரத்தினை தேர்வுக்குழுவினர் கவனமாக கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.