கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வருடமே ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றும் தெளிவான முடிவை எட்ட முடியாத நிலை உள்ளது, இதனால் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ரத்து ஆகலாம் என பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டிய சூழல் இருப்பதால் பார்வையாளர்கள் இன்றி நேரடி ஒளிபரப்பு மூலம் மட்டும் போட்டிகளை நடத்த ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.