கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன.
மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக மூன்று வடிவ போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக கங்குலி கோலிக்கு ஆதரவாக பேசி வருகிறார். விரைவில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை குறித்து பேசியுள்ள அவர் “உலகக் கோப்பை தொடரில் ரோஹித்தும் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். அவர்கள் எந்த பயமும் இல்லாமல் பவர்ப்ளே ஓவர்களை அடித்து ஆடவேண்டும். அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் சதமடிக்கும் திறமை கோலியிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.