உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்த போது சூர்யகுமார் யாதவ்வை இறக்குவதற்கு பதில் ரவீந்தர ஜடேஜாவை இறக்கினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால் இந்த மாற்றுத் திட்டம் பெரிதாக பலனளிக்கவில்லை. இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதை தவறு என குறிப்பிட்டு பேசியுள்ளார் கம்பீர். இதுகுறித்து பேசிய அவர் “சூர்யாவுக்கு பதில் ஏன் ஜடேஜாவை அனுப்பினார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சரியான திட்டம் என என்னால் எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. கோலி அவுட் ஆனதும் சூர்யகுமார் யாதவ்வை அனுப்பி அவரின் இயல்பான ஆட்டத்தை விளையாட சொல்லி இருக்கலாம். சூர்யகுமாரை ஆடவைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கிறது என்றால் நீங்கள் அவருக்கு பதில் வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாமே” எனக் கூறியுள்ளார்.