கடந்த நவம்பர் மாதத்திற்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம்போல இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா அபாரமாக விளையாடி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் சதமடித்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 899 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சிறப்பாக விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரரான ரோஹித் ஷர்மா 871 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இத்தொடரில் சொதப்பிய ஷிகார் தவான் 9-வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டார்.
பவுலிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் யஷ்வேந்திரா சஹால் முதல்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். அவர் 683 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய பந்து வீச்சாளர்களான ஜாஸ்பிரீத் பூம்ரா முதல் இடத்திலும், குல்தீப் யாதவ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 126 புள்ளிகளோடு முதல் இடத்திலும் இந்தியா 121 புள்ளிகளோடு 2-வது இடத்திலும் தொடர்கின்றன.