நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட நிலையில் ரசிகர்கள் செய்த அலப்பறை வைரலாகியுள்ளது.
நேற்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் ஏராளமான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும், சன்ரைசர்ஸ் ரசிகர்களும் வந்திருந்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணி கேப்டனாக செயல்படுவதால் சன்ரைசர்ஸ்க்கு ஆதரவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர் ஒருவரும் வந்திருந்தார்.
பேட் கம்மின்ஸ் உலக கோப்பை போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தியதில் பிரபலமானவர். அதுபோல நேற்றைய போட்டில் சென்னை அணி ரசிகர்களையும் அமைதிப்படுத்துவார் என்று சன்ரைசர்ஸ் ரசிகர்கள் பேசி வந்தனர். மேலும் க்ரவுண்டுக்குள் நுழைந்தது முதலே அமைதியாக இருக்க வேண்டும் என ஆள்காட்டி விரலை உதட்டின் மேல் வைத்து சைகை செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் இறங்கி 212 ரன்களை குவித்ததோடு மட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் அணியை 18.5வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 134 ரன்களுக்குள் சுருட்டி மிகப்பெரும் வெற்றி பெற்றனர். அதை தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்களின் கோஷத்தால் சேப்பாக்கம் மைதானமே அதிர சன்ரைசர்ஸ் ரசிகர்களோ காதை மூடிக் கொண்டனர். சன்ரைசர்ஸ்க்கு ஆதரவாக வந்த அந்த ஆஸ்திரேலிய ரசிகர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சிஎஸ்கே ரசிகர்கள் அளித்த மஞ்சள் ஜெர்சியை அணிந்துக் கொண்டு மஞ்சள் படையாக மாறி போனார். மேலும் ஒருவர் “நீங்கள் இந்த கூட்டத்தை அமைதிப்படுத்த முடியாது. ஏன் என்றால் இது சென்னை” என்ற வாசகத்தை எழுதி சன்ரைசர்ஸ் ப்ளேயர்கள், ரசிகர்களுக்கு எதிராக காட்டிய புகைப்படமும் வைரலாகியுள்ளது.