நேற்று இங்கிலாந்துடன் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தியா தோற்க போகிறது என்பது முதல் 25 ஓவர்களிலேயே தெரிந்து விட்டது ரசிகர்களுக்கு.. இருந்தாலும் எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என சில காரணங்களை கண்டுபிடித்தனர்.
நேற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 337 ரன்கள் எடுத்தது. 338 என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி இந்தியா ஆட தொடங்கியது. 9 பந்துகளை உருட்டிக்கொண்டிருந்த கே.எல்.ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். அப்போதே ரசிகர்கள் மனம் நொந்துவிட்டனர். பிறகு விளையாடிய கோஹ்லி ஒரு அரைசதமும், ரோஹித் சதமும் எடுத்து ரன்களை அதிகப்படுத்தினர். ஆனாலும் 338 என்பது பெரிய இலக்காகதான் இருந்தது. பிறகு விளையாடிய ரிஷப் பண்ட், கோலி, பாண்ட்யா ஆகியோர் சுமாரான ஆட்டத்தையே கொடுத்தனர். கைவசம் விக்கெட்கள் இருந்த நிலையில் இறங்கி அடிக்காமல் தோனி சிங்கிள்ஸ் எடுப்பதிலேயே குறியாக இருந்தார். கடைசியாக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். ஆனால் சிலர் அவர்கள் அணிந்த புதிய ஜெர்ஸியால்தான் அவர்கள் தோற்றனர் என மழுப்ப ஆரம்பித்தனர். சிலர் அல்டிமேட் லெவலில் இறங்கி “இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்தின் புள்ளிகள் குறைந்து அரையிறுதிக்கு வராமல் போய்விடும். அதனால் அடுத்து இருக்கும் பாகிஸ்தான் உள்ளே வந்துவிடும். அதனால்தான் வேண்டுமென்றே இந்தியா தோற்றது” என்று முரட்டு முட்டு கொடுத்தனர்.
அடுத்து இருக்கும் நியூஸிலாந்து ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்று, பங்களாதேஷ் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றாலும், அரையிறுதிக்கு பாகிஸ்தான் வர வாய்ப்பு இருக்கிறது. “யானைக்கும் அடிசறுக்கும்” என்பது போல இதுவரை தோற்காத இந்தியா ஒரே ஒருமுறை தோற்றுவிட்டது. அடுத்தடுத்த ஆட்டங்களில் இந்தியா கவனமாக விளையாடும் என எதிர்பார்க்கலாம்.