ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் நடப்பு ஆண்டு சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 14 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ப்ளேயர் ஆப் தி மேட்ச் வென்றார்.
மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.20 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில் வெற்றிக்கு பின் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க், தான் இன்னும் எத்தனை ஆஸ்திரேலிய போட்டிகளில் இடம்பெறுவேன் என்பது தெரியவில்லை என்றும், சில வகை போட்டிகளில் இருந்து விலகிவிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் உள்ளிட்ட ப்ரான்சைஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், கொல்கத்தா அணியில் தொடர்ந்து தான் நீடிப்பேன் என நம்புவதாகவும் கூறியுள்ளார். இதனால் விரைவில் ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.