இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அவரின் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது பிசிசிஐ. அதன்படி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் டிராவிட் இன்னும் சில மாதங்களாவது நீடிப்பார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை தோல்வி பற்றி பேசியுள்ள டிராவிட் “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது ஏமாற்றம்தான். ஆனால் அதிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம். தோல்விகளில் இருந்து மீள்வதில் நம் வீரர்கள் கைதேர்ந்தவர்கள். தோல்விகளையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் வர இருக்கும் போட்டிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது” எனக் கூறியுள்ளார்.