கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது.
டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து முதல் முதலாக ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் புகைப்படத்தை சமீபத்தில் ரிஷப் பண்ட் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகார் தவான் ரிஷப் பண்ட் உடல்நலம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். அதில் “நான் ரிஷப் பண்ட்டை சந்தித்தேன். அவர் இப்போது நலமாக இருப்பதாகக் கூறினார். அவர் முழுதாக குணமாக 8 மாத காலம் ஆகலாம்” எனக் கூறியுள்ளார். இதனால் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை இழக்க உள்ளார்.