இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சோயிப் பஷிர் என்ற 20 வயது சுழல்பந்து வீச்சாளர் விசா பிரச்சனைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
விசா கிடைக்காத காரணத்தால் அவர் அபுதாபியில் இருந்து இப்போது லண்டனுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்தியா ஹைகமிஷனிடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. சோயிப் பஷீர் பாகிஸ்தான் வம்சாவளி வீரர் என்பதால்தான் அவருக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா “நான் அவருக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் விசா வழங்கும் அதிகாரி இல்லை என்பதால், என்னால் கூடுதல் விவரங்களை உங்களுக்கு சொல்ல முடியாது. அவர் சீக்கிரமே விசா பெற்று இந்தியா வந்து விளையாடுவார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.