நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சி எஸ் கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் போட்டி நடைபெற்றது. இந்த சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச முடிவு செய்தது.
சிஎஸ்கே பேட்டிங் இறங்கிய நிலையில் ரஹானேவுக்கு வான்கடே பழக்கமான மைதானம் என்பதால் அவரை ஓபனிங் இறக்கியது. ஆனால் அவர் 5 ரன்களுக்கே அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திராவும் 21 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் ருதுராஜ் (69) – ஷிவம் துபே (66) கூட்டணி நின்று விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்களை விளாசி ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து வான வேடிக்கைக் காட்டினார். இதன் மூலம் சி எஸ் கே அணி 206 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா சதம் அடித்தும் 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. சி எஸ் கே வின் பதிரனா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே அணியின் கேப்டன் ருத்துராஜ் “எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசியது எங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. வான்கடே மைதானத்தில் எப்போதுமே நாம் 10 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டும். நாங்கள் பேட் செய்த போது மிடில் ஓவர்களில் பும்ரா எங்களைக் கட்டுப்படுத்தினார். அதே போல எங்கள் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசினர். எங்கள் அணியில் மலிங்கா (பதிரனா) யார்க்கர்களை துல்லியமாக வீசினார். அவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.