தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித் மற்றும் வார்னர் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார்.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ஸ்மித் மற்றும் வார்னரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்தது.
இந்நிலையில், ஸ்மித் ரசிகர்களிடம் கண்ணீர் மல்க சிட்னியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன். எனது வாழ்நாளில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்காக நான் யாரையும் குறை கூற போவதில்லை. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும், கிரிகெட் தான் எனது வாழ்க்கை. அது மீண்டும் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.