வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 687 குவித்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்திருந்தது. விராட் கோலி 111 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பின்னர் அற்புதமாக விளையாடிய விராட் கோலி இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதத்தைப் பதிவு செய்த 3ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்னதாக ஆலன் பார்டர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தொடர்ச்சியாக 4 தொடர்களில் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்திருந்தனர். பின்னர் 204 ரன்களில் கோலி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விருத்திமான் சஹா சதம் விளாசினார்.
பின்னர், 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.