இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் பகிர்ந்துள்ள தகவல் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன் யுவ்ராஜ் சிங், அதற்கடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை தற்போது பகிர்ந்து வரும் யுவ்ராஜ், தான் இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை இழந்தது குறித்து பேசியுள்ளார். அதில் “2007 ல் நான்தான் கேப்டனாகி இருக்க வேண்டும். ஆனால் அப்போது சச்சின் – சேப்பல் மோதல் முற்றி இருந்தது. அப்போது சச்சினா அல்லது சேப்பலா என்ற போது நான் சச்சினுக்கு ஆதரவாக இருந்தேன். இது பிசிசிஐ அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. என்னைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்கலாம் என அவர்கள் பேசியதாக நான் அறிந்தேன். ஆனால் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.