பருவநிலை மாற்றத்தால் பல நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல், நிலக்கரி உட்பட பல்வேறு பொருட்களை எரிப்பது, ரசாயன வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவைகளால் பூமியின் மேற்பகுதி அதிக வெப்பமடைகின்றது. இதனால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. பூமிக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால், பருவநிலை மாறுகின்றது.
அண்டார்டிகா, இமயமலை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால் பூமி வெப்பமடைவதுடன், கடல் நீரின் தட்ப வெட்ப நிலை மாறுகிறது. இதன் விளைவாக பருவமழை காலம் கடந்து பெய்தல், அதிக அளவு பெய்தல் அல்லது மழை பொய்த்துப் போவது, இயல்புக்கு அதிகமாக பனி் பெய்தல் போன்ற எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன.
எப்.ஏ.ஓ என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் பருவநிலை மாற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகள் வெப்பம் அதிகரித்து வறட்சி, மழை வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தி (உணவு பொருட்கள்) பாதிக்கப்படும்.
ஏழை நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதால், அந்த நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படுவதுடன், மக்களுக்கு ஊட்ட சத்து பற்றாக்குறை ஏற்படும்.
வட ஆப்பிரிக்காவில் வெப்பம் 37.4 பாரன்ஹூட் அளவுக்கு அதிகரிக்கும். இதனால் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்காவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதன் விளைவாக 15.5 முதல் 60 கோடி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் பருவநிலை மாற்ற ஆய்வுக் குழுவின் தலைவர் யூலூப் கில்மைன் கூறுகையில், இந்த பிராந்தியத்தில் வறட்சி அதிக நாள் நீடிக்கும். பருவநிலையி்ல் ஏற்படும் மாற்றத்தால் குளிர் காலம் குறையும். இந்த பிராந்தியத்தில் அடிக்கடி அனல் காற்று வீசும்.
இந்த அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், விவசாய பாதுகாப்புக்கும் நீர் மற்றும் இதர வளங்களை, அதிக நாள் பயன்படும் படி திறமையாக பயன்படுத்த வேண்டும். காடுகள் அழியாமல் பாதுகாப்பது, புதிய மரங்களை வளர்க்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஏற்கனவே விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன. மண் வளம் குறைந்து வருகிறது. மக்கள் தொகை உயர்வு, உணவு பொருட்களின் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தால் விவசாயத்திற்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மழை உரிய காலத்தில் பெய்யாமல், மற்ற பருவங்களில் பெய்வதால் நெல் போன்ற உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.