வண்ணத்துப் பூச்சிகளின் இனம் அழிந்துவிடாமல் காக்க சரணாலயம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் பிரிட்டிஷ் இயற்கை கோட்பாட்டாளர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர்.
டேவிட் பெல்லாமி, சர் டேவிட் அட்டன்பரோ என்ற இந்த இரண்டு இயற்கை கோட்பாட்டாளர்கள், 27 ஏக்கர் நிலப்பரப்பில் 12 தோட்டங்களுடன் 25 மில்லியன் பவுண்டுகள் செலவில் இதை உருவாக்க திட்டமிட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
"வண்ணத்துப் பூச்சி உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் பிரிட்டனில் உள்ள செயின்ட் அல்பான்ஸ் என்ற இடத்தில் உருவாக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக உருவாக்கப்படும் 'பயோடோம்' சுமார் 1 லட்சம் வண்ணத்துப் பூச்சிகளை வைத்துப் பராமரிக்க உதவும் என்று சர் அட்டன்பரோவும் டாக்டர் பெல்லாமியும் கூறுகின்றனர்.
இந்த பயோடோமிற்கு வெளியே இயற்கைச் சூழலுக்கேற்றவாறான 12 தோட்டங்களும் உருவாக்கப்படவுள்ளது.
பிரிட்டனில் மொத்தம் உள்ள 54 வண்ணத்துப் பூச்சி வகைகளில் கடந்த 20 ஆண்டுகளாக முக்கால்வாசி வகைகள் அழிந்து விட்டதாக இந்த இயற்கை கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் வண்ணத்துப் பூச்சிகளின் பங்கு குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மீதமிருக்கும் வகைகளையாவது நாம் காக்க வேண்டும் என்று இந்த இருவரும் கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டுவாக்கில் நிறைவேறும் இந்த திட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை, குறிப்பாக குழந்தைகளை பெருமளவு ஈர்க்குமாறு அமையும் என்று கூறுகின்றனர்.
டாக்டர் பெல்லாமி இது குறித்து கூறுகையில், சுற்றுச்சூழலில் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு அறிவுறுத்தும் வண்ணம் இந்த வண்ணத்துப்பூச்சி உலகத் திட்டம் அமையும் என்றார்.