உலக அளவில் நிகழ்ந்துவரும் வானிலை மாற்றத்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் 12.5 கோடி இந்திய, வங்கதேச மக்கள் தங்களது வீடுகளை இழப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
'புளூ அலர்ட்' என்ற இந்த ஆய்வறிக்கையை சென்னை ஐ.ஐ.டி.யின் சமூக அறிவியல் துறை பேராசிரியர் சுதிர் செல்லா ராஜன் தயாரித்துள்ளார். "உலக வெப்ப அளவு 4-5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவரும் நிலையில், தற்போதுள்ள அளவிலேயே மாசுபாடு தொடர்ந்தால் கடல்மட்ட அளவு உயரும்; பருவநிலை மாறும்; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் தெற்கு ஆசிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிபெயர வேண்டிய சூழல் ஏற்படும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (கிரீன்பீஸ்) அதிகாரி ராஜேஸ் கிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள கடலை ஒட்டிய நகரப் பகுதிகளில் சராசரி கடல்மட்ட அளவில் இருந்து 10 மீட்டர் அதிகரித்துள்ளது. இந்த அபாயத்தால் கடலரிப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக பரந்த கடற்கரையை கொண்டுள்ள மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் கடல் மட்டம் இரண்டு முதல் 10 மீட்டர் வரை அதிகமாக உள்ளதால் பெரும்பாலான மக்கள் டெல்லி, பெங்களூர், அகமதாபத், புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர்.
இந்தியாவில் பருவநிலை மாற்றம், சர்வதேச வர்த்தக வாய்ப்பு போன்ற காரணங்களுக்காக கிராமங்களைச் சேர்ந்த 80 லட்சம் பேர் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் நகரப்பகுதிகளுக்கு குடிபெயர்வார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண சர்வதேச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பருவநிலை மாற்றம் எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை இதுபோன்ற பல ஆய்வுகள் உணர்த்தி வரும் நிலையில், அதற்குறிய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க பரிந்துரை:
"பொருளாதார வளர்ச்சியில் மட்டும் முனைப்பு காட்டாமல், உலகளவில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தை தடுக்க கார்பன் பயன்பாட்டை வெகுவாக குறைப்பதில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும்" என்றும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
மேலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் கொல்கத்தா, சென்னை, பனாஜி ஆகிய நான்கு பிரதான நகரங்களில் 'புளூ அலர்ட்' முகாம்கள் நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் திட்டங்களை கொண்டுவர நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுபவர்களால் விவாதிக்கப்பட வேண்டும், இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.