நமது உடலுக்கு தினமும் தேவைப்படும் சத்துக்களுள் முக்கியமான ஒன்று கால்சியம். இது நாளொன்றுக்கு சுமார் 350 மி.கிராம் தேவைப்படுகிறது. அந்த அளவு கால்சியத்தை முழு அளவில் கொண்ட தானியமாக கேழ்வரகு இருக்கிறது.
கேழ்வரகில் எலும்பு வளர்ச்சிக்கும், எலும்பு உறுதியாக இருப்பதற்கும், 'ஆஸ்டியோ போரோசிஸ்' என்று சொல்லக்கூடிய எலும்பு மஜ்ஜை நோய் வராமல் இருப்பதற்கும், கால்சியம் நமது உடலுக்கு மிக,மிக உபயோகமாக இருக்கிறது.
கேழ்வரகை தண்ணீரில் ஊறப்போட்டு முளை கட்டி வைத்தாலே, அதில் வைட்டமின் சி அளவு அதிகமாகிவிடும். ஆக, முளை கட்டிய கேழ்வரகைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, இரும்புச்சத்து தானாகவே உடலிலிருந்து ரத்தத்துக்கு அதிகமாக இழுக்கப்படும்.
அரிசியை ஒப்பிடும் போது கேழ்வரகில், நார்சத்து அதிகமாகவே உள்ளது. எனவே வெகு சீக்கிரத்தில் மிகச் சுலபமாக ஜீரணமாகிவிடும்.
கேழ்வரகிலுள்ள 'லெஸிதின்' மற்றும் 'மெத்தியோனின்' அமினோ அமிலங்கள், நமது உடலிலுள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் உதவியாய் இருக்கின்றது. கேழ்வரகிலுள்ள 'திரியோனின்' என்கிற அமினோ அமிலமும், கல்லீரலில் கொழுப்பு உருவாவதைத் தடுக்கிறது. ஆக மொத்தத்தில் உடலிலும், இரத்தத்திலும் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கேழ்வரகில் செய்த உணவுப்பொருட்கள் மிகவும் உதவியாய் இருக்கின்றன.
தாய்ப்பால் நன்றாக அதிகமாக சுரக்க, கேழ்வரகு மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் கேழ்வரகிலுள்ள முக்கிய அமிலங்கள், இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை தாய்க்கும், தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் கிடைக்கிறது.