Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

குருப்பெயர்ச்சி 2024: யோகம் தரும் ராசிகள், குருவால் ஏற்படும் பாக்கியங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

Guru

Prasanth Karthick

, சனி, 27 ஏப்ரல் 2024 (07:53 IST)
ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.


 
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

வியாழ நோக்கம்:
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ நோக்கம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்:
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22க்கு - மாலை 05.01க்கு துலா லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் ரிஷப ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கன்னியா ராசியையும் - ஏழாம் பார்வையால் வ்ருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: கடகம் - கன்னி - வ்ருச்சிகம் - மகரம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் - ரிஷபம் - சிம்மம் - கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மிதுனம் - துலாம் - தனுசு - மீனம்

 
குரு பயோடேட்டா:

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.


 
webdunia


குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.
ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.
ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.
அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.


குருவின் பலம்:

எந்த ஒரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் - முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றை கணிக்க முடியும்.
குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும், கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும், மறைவுஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் சார பலம் மிக முக்கியம்.


குரு உங்கள் ராசிக்கு யோககாரரா?

மேஷ ராசிக்கு குரு 9, 12 இடங்களுக்கு உரியவர் ஆகிறார். 9-ம் இடம் பாக்கியஸ்தானம். எனவே யோககாரகர். ரிஷப ராசிக்கு 8,11க்கு உடையவர். ஆதிபத்திய சிறப்பு இல்லை. மிதுன ராசிக்கு 7, 10க்கு அதிபதி. சுபகிரகங்கள் கேந்திர இடங்களில் (4, 7, 10) அதிபதியாக இருக்கக்கூடாது என்பது விதி. எனவே மிதுன லக்னகாரர்களுக்கு குரு நன்மை செய்வது அரிது. இருப்பினும் இது பொது விதியே. கடக ராசிக்கு 6, 9க்கு உடையவர் ஆகிறார். 9-ம் அதிபதி யோககாரகர். சிம்ம ராசிக்கு 5, 8ம் இடங்களுக்கு அதிபதி. 5-ம் வீடு ஆதிபத்தியம் யோகத்தைக் கொடுக்கும். கன்னி ராசிக்கு 4, 7ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார் குரு. எனவே மிதுன ராசிக்கு சொன்ன விதியே இதற்கும் பொருந்தும். துலாம் ராசிக்கு பிறந்தவர்களுக்கு குரு லக்னத்திலிருந்து 3, 6 ஆகிய இடங்களுக்கு உரியவராகிறார் எனவே யோகம் கொடுப்பது அரிது. விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2, 5ம் வீடுகளுக்கு அதிபதியாவதால் நன்மைகளைக் கொடுப்பார். தனுசு, மீனம் லக்னங்களுக்கு இவரே அதிபதியாகவும் விளங்குவதால் கேந்திரம் பெற்றிருந்தால் மட்டும் யோகத்தைக் கொடுப்பதில் தாமதமாகலாம். மகர ராசியில் உதித்தவர்களுக்கு யோகத்தைக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். கும்ப ராசியில் ஜெனித்தவர்களுக்கு தனகாரகன் என்ற முறையில் நன்மைகளைச் செய்வார்.


உடல் உறுதி, அகத் தெளிவு:

உடலில் உறுதியும் உள்ளத்தில் தெளிவையும் கொடுப்பவர் குரு மட்டுமே. புனித பணிகளுக்கும் புண்ணியச் செயல்களுக்கும் புனித யாத்திரைக்கும் காரணம் குரு. சுபிட்சம், சந்தோஷம், மலர்ச்சி, பெருந்தன்மை, மென்மை, திறமை, நேர்மை, திண்ணம், எடுத்த முடிவில் வைராக்கியம் போன்றவைகளுக்கும் குருவே கர்த்தாவானவர். ஒருவர் உறுதிவாய்ந்த ஓர் உன்னதமான அழகான வீட்டை கட்டிக் கொண்டு அதில் தங்கி வாழ வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் குரு பலமாக இருக்கிறார் என்று பொருளாகும். குருவால் எல்லா செல்வங்களையும் நம்மால் பெற முடியும். அதிலும் மிக முக்கியமான மக்கட் செல்வத்தை அளிப்பவர் குரு. அணிகலன்கள், ஐஸ்வர்யம், சுகவாழ்வு, சுபிட்சம் இவற்றையெல்லாம் வழங்கும் ஆற்ற்ல் கொண்ட குரு பகவானுக்கு ஜாதகத்தில் தக்க இடமுண்டு.


குருவுக்கு உரிய ஸ்தலங்கள்:

குருவுக்கு உரிய ஸ்தலமாக திருச்செந்தூரும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டைப் புறநகரில் (அவுட்டர்) புளியறையிலும், காரைக்குடி, திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்திலும் தட்சிணாமூர்த்தியை வலம் வரும் அளவு தனிச்சந்நிதிகளாக விளங்குகின்றன. இது தவிர மயிலாடுதுறையில் (சிதம்பரம் போகும் வீதியில்) வள்ளலார் கோவில் சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், தஞ்சாவூர் அருகில் தென்குடித்திட்டையில் தனி குருவும், திருச்சி அருகில் பழூர் சிவாலயத்தில் நவகிரக தம்பதிகள் சகிதம் காட்சியளிக்க, குருவும் தமது பத்தினி தாராவுடன் அருள்புரிகிறார்.

கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவிலில் சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார். மேற்கண்ட தலங்களிலும், சென்னைக்கு அருகில் திருவலிதாயம் (தற்போது பாடி என்று பெயர்), மயிலாடுதுறை பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலை, சென்னை - வேலூர் ரோட்டில் வாலாஜா பேட்டையிலிருந்து சோளிங்கர் போகும் சாலையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம், புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி பாதையில் ஆலங்குடி உள்ளிட்ட தலங்களிலும் தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது. மதுரை அருகில் குருவித் துறையிலும் (குரு வீற்றிருந்த துறை- வைகைக் கரையில்) ஹோமம், பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்! இன்றைய ராசி பலன் (27.04.2024)!