பண பரிவர்த்தனை செயலியாக பயன்பாட்டில் உள்ள ஃபோன்பே செயலி கூகிள் ப்ளே ஸ்டோருக்கு இணையான Indus app store ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அனைத்து வித பணப்பரிவர்த்தனைக்கும் ஃபோன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பேமண்ட் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். பேமண்ட் செயலிகளில் பிரபலமான ஃபோன்பே தற்போது இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கூகிள் ப்ளேஸ்டோருக்கு போட்டியாக இண்டஸ் ஆப் ஸ்டோரை தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் ஆண்ட்ராய்டு ஃபோன்கள் தான் புழக்கத்தில் உள்ளன. இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான பல விதமான செயலிகள், ஆன்லைன் கேம்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இண்டஸ் ஆப் ஸ்டோர் எந்த விதத்தில் மாறுபடுகிறது என்றால் இதில் செயலிகளை இந்தியாவில் உள்ள 12 உள்ளூர் மொழிகளில் வெளியிடலாம் என்பதுதான்.
இதனால் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழியிலான செயலிகள் மக்கள் பயன்பாட்டிற்கு எளிதாக கிடைக்கும் என்பதால் இந்தியாவில் வாடிக்கையாளர்களை கவர முடியும் என ஃபோன்பே திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த செயலிகளை இண்டஸ் ஆப் ஸ்டோரில் லிஸ்டிங் செய்யவும், தரவிறக்கவும் எந்த கட்டணமும் கிடையாது என கூறப்பட்டுள்ளது. இதுபோல MI app store, Samsung app store என ஸ்மார்ட்போன் நிறுவனங்களே ஆப் ஸ்டோர்கள் வைத்திருந்தாலும் கூகிள் ப்ளே ஸ்டோர்தான் கோலோச்சி வருகிறது. இந்நிலையில் இண்டஸ் ஆப் ஸ்டோர் வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.