கட்சி தலைமை தெரிவிப்பதற்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஹெச்.ராஜா ஒரு முந்திரிக் கொட்டை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் அதற்குள் நேற்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் போட்டியிடுகிறார் என்று கூறினார்.
முறையாக கட்சி தலைமை அறிவிப்பதற்குள்ளேயே ஹெச்.ராஜா இப்படி கூறியது பாஜக தலைமையை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. பாஜகவை சேர்ந்த சிலரே ராஜா மீது விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் ஹெச்.ராஜா நேற்று நான் வெளியிட்டது வெறும் யூகங்களின் அடிப்படையிலான பட்டியலே. வேட்பாளர்கள் பட்டியலை முறைப்படி கட்சி மேலிடம் அறிவிக்கும் என கூறி சமாளித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ். இளங்கோவன் கட்சி தலைமை தெரிவிப்பதற்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஹெச்.ராஜா ஒரு முந்திரிக் கொட்டை. கட்சி மேலிடம் அறிவிக்கும்போது அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறாரா அல்லது ஆட்டுப்பட்டியில் இருக்கிறாரா என்பதைப் பார்க்கலாம் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு எச்.ராஜா தரப்பிலிருந்து என்ன ரிப்ளை வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.