கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடதுசாரி வேட்பாளர்களைப் பற்றி ஒருவார்த்தைக் கூட தவறாக பேசமாட்டேன் உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவி உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இதையடுத்து இரண்டாவது தொகுதியாக போட்டியிடும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கேரளா வந்த அவர் நேற்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார்.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது. நாட்டின் பொது எதிரி பாஜகவே எனக் கூறி வருகிறது. அப்படி இருக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடதுசாரிகளின் தொகுதியான வயநாட்டில் போட்டியிடுவதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸின் உண்மையான எதிரி பாஜகவா அல்லது காங்கிரஸா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது ‘கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் எதிர் எதிர் நிலைப்பாடு எடுத்து செயல்பட்டு வருகின்றனர். அதனால் இடதுசாரி சகோதரர்கள் என்னுடன் சண்டையிடுகிறார்கள். ஆனால் என்னுடைய பிரச்சாரத்தில் இடதுசாரிகளைப் பற்றி தவறாக நான் ஒருவார்த்தைக் கூட பேசமாட்டேன். நாட்டின் ஒற்றுமை, அமைதிக்காகதான் நான் வயநாட்டில் போட்டியிடுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.