தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவதாக அறிவித்த வைகோ இப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேப் போல மாநிலங்களவை சீட் வைகோவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் திமுக மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தது. அதற்கு மதிமுக தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வமானப் பதில் எதுவும் அளிக்கப்படவில்லை. இதே போன்றதொரு அழுத்தத்தையே விசிகவுக்கும் கொடுத்தது திமுக. அதனால் விசிக இரண்டு தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியனிலும் மற்றொன்றில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேப் போல மதிமுகவும் உதயசூரியன் சின்னதில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத வகையில் ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி அவர்கள், தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்’ என வைகோ அறிவித்துள்ளார். கட்சியினருடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை வைகோ எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் திடீரென நேற்று மதிமுக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அற்விக்கப்பட்டது. வைகோவின் இந்த திடீர் மாற்றம் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. வைகோவின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக சிலக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. மதிமுகவுக்கான தனிச்சின்னத்தை இன்னமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. அதனால் இதன்பிறகு தேர்தல் ஆணையம் ஒதுக்கினாலும் கொடுக்கப்படும் புதிய சின்னத்தை குறுகிய நாட்களுக்குள் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிடாமல் இருந்தால் திமுக நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே. இந்தக் காரணங்களினாலேயே மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே இந்த முடிவை அறிவித்துள்ளார்.