அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வந்த பின் முதன்முதலாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.இதனையடுத்து மனைவி பிரேமலதாவுடன் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கேப்டனின் உடல்நலக்குறைவால் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மனமுடைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது விஜயகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆறுதல் படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் பிப்ரவரி 16ந் தேதி சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர் தொண்டர்கள். ஆனாலும் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை இதுவரை சந்திக்கவில்லை. தேமுதிக சம்மந்தமாக பிரேமலதா விஜயகாந்தும் எல் கே சுதிஷூம் மட்டுமே பேசி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்றும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் இருவேறு செய்திகள் வெளியாகி பரபரப்புகளைக் கிளப்பின.
இந்நிலையில் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரிடம் 1,30 நிமிடப் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:-
நெறியாளர்: வணக்கம் கேப்டன்
விஜயகாந்த்: வணக்கம் சார்
நெறியாளர்: எப்படி இருக்கீங்க கேப்டன்?
விஜயகாந்த்: நல்லா இருக்கேன் சார்
நெறியாளர்: உடல்நிலை எல்லாம் எப்படியிருக்கு?
விஜயகாந்த்: உடல்நிலை எல்லாம் நல்லாயிருக்கு
நெறியாளர்: அமெரிக்கா போயிட்டு வந்ததுக்கு அப்புறம் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு?
விஜயகாந்த்: நல்லாயிருக்கேன்... நல்லாயிருக்கேன்
நெறியாளர்: மக்கள் எல்லாருமே, மற்ற பிரச்சாரங்களை விட தேமுதிக தலைவர் எப்போது வருவார், என்ன பேசுவார் என்று காத்துட்டு இருக்காங்க?
விஜயகாந்த்: கூடிய விரைவில் வருவேன் சார். என்ன பேசுவேன் என்பதை அங்கு வந்து கேட்கச் சொல்லுங்கள்
நெறியாளர்: தொடர்ச்சியா பிரச்சாரத்துக்குப் போவீங்களா?
விஜயகாந்த்: அது டாக்டர் சொல்றபடி தான் செய்ய முடியும்.
நெறியாளர்: இப்போ அதிமுக - தேமுதிக கூட்டணி எப்படியிருக்கு கேப்டன்
விஜயகாந்த்: அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும்
நெறியாளர்: ஏன் திமுக கூட்டணி தோற்கும் என்று சொல்கிறீர்கள்?
விஜயகாந்த்: திமுக - தில்லு முல்லு கட்சி
நெறியாளர்: அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான போட்டி எப்படியிருக்கு கேப்டன்?
விஜயகாந்த்: தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கின்ற போட்டி
நெறியாளர்:அதில் நிச்சயமாக அதிமுக - தேமுதிக வெற்றி.. பெறுமா ?
விஜயகாந்த்: தர்மம் தான் ஜெயிக்கும்... தர்மம் தான் ஜெயிக்கும்.
நெறியாளர்: பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
விஜயகாந்த்: மோடி நல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
நெறியாளர்: தேமுதிக தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
விஜயகாந்த்: நல்லா உழைக்க வேண்டும்; நாப்பதிலும் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.