ஜூன் 4- ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, டிடிவி தினகரன் கையில் அதிமுக முதலிலே சென்று இருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார் என தெரிவித்தார்.
அதிமுகவை ஒப்பந்ததாரர்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சித்த அவர், அதிமுகவினர் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர் என்று கூறினார். மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.