கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனுமதி இன்றி கூட்டம், பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில் அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.