இன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் ரூ.40 கோடி மதிப்புள்ள தங்கம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பித்தாபுரம் தொகுதியில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் தெரிகிறது. இருப்பினும் தங்கம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே வாகனத்தில் கடந்த மாதம் 13ம் தேதி ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திச் சென்று பிடிபட்ட நிலையில், மீண்டும் அதே வாகனத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த இரு சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.