அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படம் துவக்கத்திலேயே, மருத்துவ துறையில் சம்மந்தப்பட்டவர்கள் சிலர் கடத்தபடுகிறார்கள். மருத்துவர்கள் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த கடத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற தேடுதல் வேட்டையில் சத்யராஜ் ஈடுபடுகிறார். அதில் இதற்கு பின்னர் விஜய்தான் உள்ளார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்கிறார்.
இங்கு தான் துவங்குகிறது படம். விஜய் மருத்துவத்துறையில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.
படத்தில் விஜய் தந்தை மற்றும் இரு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மகன் வேடங்களில் விஜய் டாக்டராகவும், மேஜிக் மேன் ஆகவும் நடித்துள்ளார்.
தந்தை விஜய்யின் கதாபாத்திரம் மாஸாகவும், கிளாஸாகவும் உள்ளது. விஐய், நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார்.
தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் மருத்துவம் பற்றி இப்படத்தில் விஜய் அதிகம் பேசியுள்ளார். வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிளர வைக்கிறது.
தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டராக வரும் சமந்தா தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தலைமை மருத்துவருக்கு உதவியாளராக வருகிறார் காஜல் அகர்வால்.
தந்தை விஜய்க்கு மனைவியாக வரும் நித்யா மேனன், நடிப்பில் மிளிர்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. வெள்ளை தாடியுடன் வரும் எஸ்.ஜே.சூர்யா அப்லாஸை அள்ளுகிறார். வடிவேலுக்கு இந்த படம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. காமெடி மட்டுமல்லாமல், குணசித்திர கதாபாத்திரத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், அம்மாவாக வரும் கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மருத்துவத்துறை பற்றி நிறைய படங்கள் வந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபாட்டு இருக்கிறது. அட்லிக்கு இதற்கு வாழ்த்துக்கள்.
மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக சூடு பிடிக்கிறது. குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மெர்சல்’ மிரட்டல் அரசன்.