Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அவெஞ்சர்ஸின் அடுத்த அயர்ன் மேன் யார்?- ஸ்பைடர்மேன் விமர்சனம்

அவெஞ்சர்ஸின் அடுத்த அயர்ன் மேன் யார்?- ஸ்பைடர்மேன் விமர்சனம்
, வெள்ளி, 5 ஜூலை 2019 (10:33 IST)
மார்வெல் திரைப்பட வரிசையில் 23வது படமான ஸ்பைடர்மேன் ஃபேர் ஃப்ரம் ஹோம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் கதை எளிதில் சொல்லிவிட கூடியதாய் இருந்தாலும் இதற்கு முன்னர் மார்வெலில் வெளியான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், எண்ட் கேம், கேப்டன் மார்வெல் ஆகிய படங்களின் தொடர்ச்சி இந்த படத்தில் சில இடங்களில் இருப்பதால் அந்த படங்களை பார்த்திருப்பது நல்லது.

பார்த்திருக்காவிட்டாலும் ஒரு நல்ல சூப்பர்ஹீரோ எண்டெர்டெய்ன்மெண்ட் படமாக இது இருக்கும். இன்பினிட்டி வாரில் தானோஸால் இறந்தவர்கள் அவெஞ்சர்ஸின் முயற்சியால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் உயிரோடு வருகிறார்கள். பீட்டர் பார்க்கர் உட்பட! ஆனால் 5 வருடத்துக்கு முன் எந்த வயதில் மறைந்தார்களோ அதே வயதில் திரும்ப வருகின்றனர்.

இந்நிலையில் தானோஸ் போட்ட சொடக்கால் வேறொரு பூமியை சேர்ந்த சில பஞ்சபூத சக்திகள் பூமிக்குள் நுழைந்து விடுகின்றன. அதை அழிக்க மிஸ்டீரியோ என்னும் நாயகன் பூமிக்கு வருகிறான். அவனுக்கு உதவ சொல்லி பீட்டர் பார்க்கரை கேட்கிறார் நிக் ஃப்யூரி. ஆனால் பீட்டர் பார்க்கர் தனது நண்பர்களோடு ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்லவே ஆசைப்படுகிறான்.

அந்த பஞ்சபூத சக்திகள் ஐரோப்பாவுக்கே வந்துவிட மிஸ்டீரியோவோடு சேர்ந்து அந்த பூதங்களை அழிக்கிறான் ஸ்பைடர்மேன். அதேசமயம் இறந்துபோன டோனி ஸ்டார்க்கின் கண்ணாடி பீட்டர் பார்க்கருக்கு கிடைக்கிறது. அதன் மூலம் ஸ்டார்க் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் கட்டுப்படுத்த முடியும். அதை மிஸ்டீரியோவிடம் கொடுத்து விடுகிறான் பீட்டர் பார்க்கர்.

பிறகுதான் தெரிகிறது மிஸ்டீரியோ உண்மை இல்லை. க்வெண்டின் பெக் என்ற டோனி ஸ்டார்க்கின் பழைய எதிரி ஒருவன்தான் மிஸ்டீரியோவாக நடித்து அந்த கண்ணாடியை பீட்டரிடமிருந்து பெற்றிருக்கிறான் என்று! க்வெண்டின் தந்திரங்களுக்கு முன்னால் ஸ்பைடர்மேன் ஒன்றும் இல்லாமல் போகிறான். தனக்கு அடுத்து தனது இடத்தில் பீட்டர் இருப்பான் என்று மிகவும் நம்பியவர் டோனி ஸ்டார்க். அந்த நம்பிக்கையை ஸ்பைடர்மேன் எப்படி காப்பாற்றினார்? க்வெண்டின் பெக்கின் தந்திரங்களை எப்படி முறியடித்தார்? என்பதுதான் முழுக்கதையுமே!

ஒரு பத்திரிக்கை நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் கொண்ட மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் ஸ்பைடர்மேன் முதலிடத்தில் இருக்கிறார். ஸ்பைடர்மேன் படங்கள் என்றாலே பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சென்று பார்ப்பார்கள். அதே தரம் இந்த படத்திலும் உள்ளது.

கிராபிக்ஸ், இசை, நடிப்பு என சகலத்திலும் மார்வெலின் அதே தரம். ஸ்பைடர்மேன் படங்களில் உள்ள ஒரு தனி சிறப்பு ஸ்பைடர்மேனின் சண்டை காட்சிகள். ஒரு ரப்பர் போல் வளைந்து, நெளிந்து, குதித்து, தாவி செல்லும் அந்த ஸ்பைடர்மேன் அப்படியே இதிலும் இருக்கிறார்.

அடுத்த 10 வருடங்களில் தானோஸ் போன்ற மிகப்பெரிய வில்லன் ஒருவன் வர இருக்கிறான். அதற்கு முன் ஸ்பைடர்மேன் மற்றும் மேலும் சில சூப்பர் ஹீரோக்கள் இணைந்த “புதிய அவெஞ்சர்ஸ்” குழு உருவாக இருக்கிறது. அதற்கான தொடக்கம்தான் இந்த படம். அடுத்த 10 வருடம் கழித்து வரப்போகும் மிகப்பெரிய வில்லனுக்காக இப்போதே ஸ்பைடர்மேனோடு தயாராகுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூர் தேர்தலால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திடீர் மாற்றம்!