சஞ்சய், டிம்பிள் என இரு புதுமுகங்கள். படத்தின் பெயர் தரகு. அரைகுறை உடையில் பாபிலோனா. சரிதான், தாங்க முடியாதுடா இந்த லோ பட்ஜெட் லொள்ளு என்று உட்கார்ந்தால், கொஞ்ச நேரத்திலேயே மனசை அள்ளிக் கொள்கிறார்கள்.
சஞ்சய்க்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ். குறுக்கு வழியில் கோடிகள் சம்பாதிப்பவரின் வாழ்வில் இனிக்கும் கரும்பாக என்ட்ரி ஆகிறார் டிம்பிள். வாடகைக்கு வீடு தேடித்தர கேட்கும் டிம்பிளை இதயத்தில் குடியமர்த்துகிறார் சஞ்சய். சம்பாதித்த ஐம்பது கோடி மற்றும் காதலியுடன் எஸ்கேப்பாகலாம் என திட்டமிடும் போது, எதிர்பாராத அதிர்ச்சி. ஐம்பது கோடியுடன் காணாமல் போகிறார் டிம்பிள். காசையும், காதலியையும் கண்டுபிடித்தாரா என்பது மீதி கதை.
பழகிய பாதையில் கதை பயணிக்காமல் இருப்பது படத்தின் பலம். இன்னொரு பலம் டிம்பிள். ஹோம்லியாக அறிமுகமாகி, குலுக்கல் டான்சில் கோலி சோடாவாக பொங்குகிறார்.
அவர் வாடகைக்கு வீடு கேட்பது நாகடம் என தெரியவரும் இடம், எதிர்பாராத திருப்பம். நாயகன் சஞ்சய்க்கு அதிசயமாக நடிக்கவும் வருகிறது. காசையும், காதலியையும் தேடி புறப்படும்போது, முகத்தில் காட்டும் உணர்ச்சி, அவரை கோடம்பாக்கத்தில் கவனிக்க வைக்கும்.
சிங்கமுத்து கோஷ்டியின் காமெடி மேளத்தை விட, டிம்பிளின் உதவியாளராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் இரட்டை அர்த்த காமெடிக்கு கலகலக்கிறது திரையரங்கு.
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ராஜன் பி தேவ், அமைச்சர் விணுசக்ரவர்த்தி, வட்ட செயலாளர் மகாநதி சங்கர் ஆகியோரும் ரசிக்க வைக்கிறார்கள்.
பரணி நினைத்தால் இனியும் தரணி ஆளலாம் போல், பாடல்கள், அதிலும் அந்த மனசும் மனசும் மெலடி, இன்பத்தேன்! காசி விஸ்வாவின் கதையை மீறாத ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கவனிக்க வைக்கின்றன.
அவ்வப்போது தொய்வடையும் திரைக்கதையை இன்னும் சற்று இழுத்துப் பிடித்திருந்தால் தரகுவின் தரம் உயர்ந்திருக்கும்.