‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற டயலாக்கை இப்போது திமுகவும் பயன்படுத்திவிட்டது.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்திய வசனம்தான் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”. அந்த வரி தமிழகம் முழுவதும், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.
விடுவார்களா தொலைக்காட்சி நிறுவனங்கள்.. விஜய் டிவியில் ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் ஒருவர் பெண் போல் வேடம் அணிந்து அந்த வசனத்தை திரும்ப திரும்ப கூறியே பிரபலமானார். வசனமும் பிரபலமானது. ஆரம்பத்தில் அதை ரசித்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் டீவி ஏகத்துக்கும் அவரை கலாய்க்க கொதித்து எழுந்தார்.
இதுபற்றி சென்னை கமிஷனர் வரை போய் புகார் கொடுத்தார். ஆனாலும் அவர்கள் நிறுத்தியபாடில்லை. அந்த பஞ்சாயத்து ஒரு புறம் போய் கொண்டிருக்க, மறுபுறம் திரைப்படங்களிலும் அந்த வசனத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். பாடல்களிலும் அது எதிரொலித்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ரஜினி முருகன் படத்தில் ‘என்னம்மா இப்படி பன்றீங்களேமா’ என்று தொடங்கும் ஒரு முழுபாடலே வெளியானது.
அந்த பாடல் பற்றி கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன், அந்த வரி ஒரு தனியார் காட்சியின் நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்திற்கு சம்பந்தமில்லை என்று பதில் கூறினார். இதுபற்றி தனது சமூகவலை பக்கத்தில் கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன் “ என்னை கலாய்த்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து அந்த பாடல் எடுக்கப்பட்டது எனில், கலாய்ப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா?.
என்னை கலாய்த்து எடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் காயப்படுத்திய ஒன்று. அதை வணிக ரீதியாக பயன்படுத்திவிட்டு, அதற்கான கிரெடிட்டை என்னை கிண்டல் செய்தவர்களுக்கே கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
ஒரு வேளை நான் கூறியதைத்தான் அந்த பாடலில் பயன்படுத்தினோம் என்று கூறினால் நான் பணம் கேட்பேன் என்று சிவகார்த்திகேயன் நினைத்து விட்டார் போலும். கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன். அதைவிட எனக்கு சிறந்த வேலைகள் நிறைய இருக்கிறது” என்று காட்டமாக தெரிவித்தார்.
இப்படி போய் கொண்டிருந்த வேளையில், இன்று அனைத்து முக்கியமான தமிழ் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் திமுக சார்பில் ஒரு தேர்தல் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் “5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க.. பேனர்ல பாத்திருப்பீங்க.. ஏன் டிவியில பாத்திருப்பீங்க... நேர்ல பாத்திருக்கீங்களா?” என்று போட்டு அதன் கீழ் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று குறிப்பிட்டிருந்தது.
கடைசியில் லட்சுமி ராமகிருஷ்ணனின் வசனத்தை திமுகவும் கையில் எடுத்து விட்டது. இதற்காக அவர் சந்தோஷப்படுவாரா.. இல்லை விஜய் டிவி மீதும், சிவகார்த்திகேயன் மீதும் காட்டிய கோபத்தை, திமுக மீதும் காட்டுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என்ன செய்யப்போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்?...