ஏழை மக்களின் சிறுநீரகத்தை எடுத்து அயல்நாடுகளில் விற்றுவந்த மருத்துவர் உட்பட 5 பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவின் குர்கான் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்நகர மற்றும் உத்திர பிரதேச காவல்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தியதில் அவர்கள் பிடிபட்டனர்.
இதுகுறித்து குர்கான் காவல்துறை ஆணையர் மகேந்தர் லால் கூறுகையில், "மருத்துவமனையில் சோதனையிட்ட போது மூன்று பேரின் சிறுநீரகம் அங்கிருந்த மருத்துவர்களாலேயே எடுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தோம். மொத்தம் பிடிபட்ட 5 பேரும் உத்திர பிரதேசத்தின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். உபந்திரா என்ற மருத்துவர் தான் அந்த மருத்துவமனையை நடத்தி வந்தார்.
இந்த கும்பல் கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழைகளின் சிறுநீரகத்தை திருடி வெளிநாடுகளுக்கு விற்று வந்துள்ளது. சிறுநீரகத்தை கொடுத்ததற்காக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளனர். இந்த சிறுநீரக திருட்டு சர்வதேச தொடர்புடன் நடந்துவருகிறது" என்றார்.
கிரேக்க நாட்டை சேர்ந்த நான்கு பேரும், பிரிட்டனைச் சேர்ந்த இந்திய கணவன், மனைவியும் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் சிறுநீரகத்தை வாங்குவதற்காக அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் விற்கப்படுவது தொடர்பாக குர்கான், டெல்லி, வடக்கு உத்திரபிரதேசம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயர்அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரகத்தை இழந்தவர்களில் பெரும்பாலானோர் முதலில் அந்த மருத்துவமனையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பிறகு அவர்களிடம் மிரட்டியும் சிறுநீரகம் அபகரிக்கப்பட்டுள்ளது.
'சிறுநீரகத்தை தர மறுத்தால் கொலை செய்துவிடுவோம்' என்று மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கும்பல் கடந்த ஆறு ஆண்டுகளாக 500 சிறுநீரகங்களை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.