காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில் குண்டு வெடித்து ஒரு குழந்தையும் பலியாகியுள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வபோது அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.
புத்தாண்டு தினமான நேற்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டங்ரி என்ற கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு வீட்டில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை கைப்பற்றிய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து அந்த கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.