தனது சேனலின் பார்வையாளர்களை அதிகப்படுத்த நினைத்து யூட்யூபர் இளைஞர் ஒருவர் சாகசம் செய்ய முயன்று செல்போன் டவரில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பலரும் யூட்யூப் சேனல்கள் தொடங்குவதை பொழுதுபோக்காகவே செய்யத் தொடங்கி விட்டனர். இதனால் யூட்யூபில் ஏராளமான போட்டிகள் ஏற்பட்டு விட்ட சூழலில் அதிகமான பார்வையாளர்களை, பார்வைகளை பெற பலர் ஆபத்தான சாகச முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்தவர் யூட்யூபர் நீலேஸ்வர் என்ற இளைஞர். இவர் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் இவருக்கு 8.87 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். யூட்யூபில் 10 லட்சம் சந்தாதாரர்களை கடக்கும் சேனல்களுக்கு கோல்டு பட்டன் என்ற அன்பளிப்பு யூட்யூபால் வழங்கப்படும். அதை பெற வேண்டி சந்தாதாரர்களை அதிகரிக்க திட்டமிட்ட நீலேஸ்வர் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் ஒன்றில் ஏறி அதை சாகச வீடியோவாக பதிவேற்ற திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது நண்பர் துணையுடன் சென்ற அவர் செல்போன் டவரில் பாதிதூரம் ஏறியிருந்த நிலையில் கம்பிகளுக்குள் எசக்கு பிசக்காக சிக்கிக் கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் அங்கிருந்து பயந்து ஓடிவிட, அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீசார் 5 மணி நேரம் போராடி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டுள்ளனர். யூட்யூபில் கவனம் பெறுவதற்காக இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.