மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு மீது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதை மாநில மொழிகளில் வெளியிட நடிகை பார்வதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020ன் மீது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த புதிய வரைவினால் மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவை மக்களுக்கு புரியும் வகையில் மாநில மொழிகளில் வெளியிடாதது ஏன் என கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மலையாள நடிகை பார்வதி/ அதில் அவர் “காடுகள், மலைகள் மற்றும் ஏழை மக்கள் அவர்களின் சுற்றுசூழல் ஆகியவற்றிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த சட்ட வரைவால் மனித உரிமை சார்ந்த விஷயங்கள் கேலிக்கூத்தாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “உங்களுக்கு புரியும் வகையில் எதிர்ப்பு கடிதத்தை நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். மக்களுக்கு புரியும் இந்திய மொழிகளில் இந்த வரைவை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதையும் சுட்டுக்காட்ட விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.