'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு " என்ற திருக்குறள் அண்ணன் தம்பிகளான அனில், முகேஷ் அம்பானிகளுக்கு பொருந்தும். தம்பி அனில் எரிக்சன் கடனால் சிக்கி தவித்து கொண்டிருந்த நிலையில், வேடிக்கை பார்க்க மனம் இல்லாமல் அண்ணன் முகேஷ் காப்பாற்றியுள்ளார். இதனால் தலைக்கு வந்ததது தலைப்பாகையோடு போனக்கதையாக தப்பித்துள்ளார் அனில் அம்பானி.
ஆர்காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்துக்கு தரவேண்டிய ரூ.550 கோடி கடனை மார்ச் 19ம் தேதிக்குள் தர வேண்டும், இல்லாவிட்டால் அதன் நிறுவனர் அனில் அம்பானி சிறைக்கு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுவிதித்து இருந்தது. இதனால் நெருக்கடியில் இருந்த அனில் அம்பானி தன்னுடைய சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயற்சி எடுத்து வந்தார்.
இதற்கிடையே ஆர்.காம் நிறுவனத்திற்கு கடன் கொடுத்திருந்த பிஸ்என்எல், நிறுவனமும் எஸ்பிஐ வங்கியும் எரிக்சன் நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முதலில் கடனை செலுத்திவிட்டு பின்னர்தான் எரிக்சன் நிறுவனத்தின் கடனுக்க முக்கியத்துவம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தன.
இந்நிலையில் திடீர் திருப்பமாக ஆர்.காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய ரு.550 கோடியை ரூ.21 கோடி வட்டியுடன் மார்ச் 18ஆம் தேதி செலுத்திவிட்டார்.
இது பற்றி அனில் அம்பானி கூறுகையில், "என் அண்ணன் முகேஷ் மற்றும் அண்ணி நிடாவுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சரியான நேரத்தில் எனக்கு பக்கபலமாக நின்று தோள்கொடுத்து உதவிய இருவருக்கும் நானும் என்னுடைய குடும்பத்தினரும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.