உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தப்பி சென்ற இந்திய மாணவர் மீது குண்டு பாய்ந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்தியாவை வந்தடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இந்திய மாணவர் நவீன் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது போலந்து சென்றுள்ள மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை மந்திரி வி கே சிங் அங்கு வரும் இந்திய மாணவர்களை இந்தியா அனுப்பி வைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, போர் காரணமாக தலைநகர் கீவ்விலிருந்து வெளியேறிய இந்திய மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும், அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்தபட்ச இழப்புடன் அதிகமான மாணவர்களை பாதுகாப்புடன் வெளியேற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.