ஆட்டோமொபைல் துறைகளின் தொடர் சரிவு காரணமாக, மேலும் 5 நாட்களுக்கு வேலையில்லா நாட்களாக ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளதால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பண மதிப்பிழப்பு விவகாரம், ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி, மெட்ரோ ரயில்களின் பயன்பாடு, மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகை ஆகியவை காரணமாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது
இந்த நிலையில் ஏற்கனவே அசோக் லேலண்ட் உள்பட ஒருசில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வரும் நிலையில் தற்போது அசோக் லேலண்ட் மீண்டும் ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள வேலையில்லா நாட்களில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அசோக் லேலண்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளதால் ஊழியர்களின் சம்பளம் முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.