சீன மோதல் விவகாரத்தில் காங்கிரஸ் – பாஜக தரப்பில் வாக்குவாதங்கள் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ் குறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனங்களை வைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் இந்தியாவை அவமதிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் எனவும், முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் 600 ஊடுறுவல்கள் நடந்ததாகவும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜகவிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம் 2015 முதல் நடந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊடுறுவல்களை பிரதமர் மோடியிடம் கேட்பீர்களா? என கேள்வி எழுப்பிய நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “காங்கிரஸ் காலத்தில் ஊடுறுவல்கள் இருந்ததாகவும், ஆனால் எல்லைகள் பறிப்போகவில்லை மற்றும் வீரர்களும் சாகவில்லை” என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறாக இருதரப்பினர் இடையே வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜே.பி.நட்டா ”ஒரு ராஜ குடும்பமும் அவர் விசுவாசிகளும் மக்களிடம் தொடர்ந்து தவறான மாயைகளை உருவாக்கி வருகின்றனர். பல எதிர்கட்சிகள் அரசுடன் பல்வேறு ஆலோசனைகளையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. பல இடங்களில் அரசிற்கு முழு ஆதரவையும் அளித்து வருகின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தின் தவறான செயல்களால் நம்முடைய தேசத்தின் பல ஆயிரக்கணக்கான நிலப்பகுதிகளை இழந்து விட்டோம். ஒரு குடும்பத்தின் நலன் ஒட்டுமொத்த தேசத்தில நலனாக ஆகிவிடாது” என்று கூறியுள்ளார்.