யமுனை ஆற்றில் வாழும் அரிய வகை டால்ஃபினை பிடித்து சமைத்து சாப்பிட்ட மீனவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இமயமலையில் தொடங்கி பல வட மாநிலங்களை கடந்து செல்லும் கங்கை, யமுனை நதிகளில் பல உயிரினங்கள் வசித்து வருகின்றன. யமுனை நதியில் நன்னீர் முதலை, நீர்நாய், டால்ஃபின் உள்ளிட்ட பல அரியவகை அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவற்றை பிடிப்பதோ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அரியவகை நன்னீர் டால்ஃபின் அவரது வலையில் சிக்கியுள்ளது. அதை விடுவிக்காமல் அவர் அதை எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டுள்ளார். அந்த டால்ஃபினை எடுத்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மீனவரை கைது செய்துள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிந்துள்ளனர்.