காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு இன்று மத்திய அரசிதழில் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. அனால், மத்திய அமைச்சரவை காவிரி ஆணையத்தை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. எனவே தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்டிருந்தது.
இதுகுறித்து பேசிய மத்திய நீர் வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அரசிதழில் வெளியிடப்படும் என இன்று காலை தெரிவித்தார். மேலும், மத்திய நீர்வளத்துறை சார்பில் அரசிதழில் பதிவேற்றம் செய்ய பரிந்துரைக் கடிதம் தரப்பட்டது.
அதன்படி, தற்போது காவிரி ஆணையம் பற்றிய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.