சமையல் செய்யும் போது சூடான எண்ணெயில் செல்போன் தவறி விழுந்த நிலையில், அந்த செல்போன் வெடித்து சிதறி, அதில் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில், சந்திரபிரகாஷ் என்பவர் சமையல் செய்து கொண்டிருந்த போது, சூடான எண்ணெயில் அவரது செல்போன் தவறி விழுந்து விட்டது. சமைத்துக் கொண்டபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், செல்போன் தவறி விழுந்ததாகவும், இதனால் செல்போன் பேட்டரி சில வினாடிகளில் வெடித்து சிதறியதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்பு காரணம் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிரிழந்த சந்திர பிரகாஷிற்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி கண்கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் செய்யும் போது செல்போனை பாக்கெட்டில் வைக்க வேண்டாம் மற்றும் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்றும், சூடான எண்ணெய் பட்டவுடன் சில வினாடிகளில் செல்போன் வெடித்து சிதற வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.