மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பல்வேறு சட்ட திருத்தங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா பல்வேறு மத, இன அமைப்புகளை கொண்ட நாடு. அதனாலேயே ஆரம்பம் முதலே சிவில் சட்டங்களில் வெவ்வேறு இனத்தினர் மற்றும் மதத்தினருக்கான சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்கும் வண்ணம் சில மாற்றங்களும் உள்ளன. சிவில் சட்டம் தவிர கிரிமினல் சட்டம் அனைவருக்கும் ஒரே சட்டமாகவே உள்ளது.
இந்தியா முழுவதையும் ஒரே விதமான கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக சட்ட அமைப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து தற்போது பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறான பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிகள் போன்றோரின் தனிப்பட்ட சட்ட சலுகைகளையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எதிர்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் மாநில சட்ட அமைப்புகளின் ஸ்திர தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.
ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்தினால்தான் ஒன்றுபட்ட இந்தியாவை கட்டமைப்பதில் புதிய உயர்வுகளை எட்ட முடியும் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.