சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை, பயனர்களின் தனி உரிமையை பாதுகாக்கவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின், இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் குற்றச்செயலில் ஈடுபடும் நபரை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனேயே அறிமுகப்படுத்தப்பட்டன. சமூக ஊடக தளங்களை சில விஷமிகள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவே புதிய விதிகள் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் வாட்ஸ் அப்பின் சாதாரண பயனர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் ஈடுபட்ட அந்த நபரை கண்டறியவே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.